Wednesday, May 13, 2020

நாட்டில் 889 பேருக்கு கொரோனா தொற்று



Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றிரவு மேலும் ஐவர் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.

இதன்பிரகாரம்,நேற்றைய தினத்தில் மாத்திரம் 20 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 17 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுக்குள்ளான மேலும் இருவர் கடற்படை உறுப்பினர்களின் உறவினர்கள் என்பதுடன், மற்றுமொருவர் துபாயிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானோரில் 514 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 16 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 382 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை




பொதுவாக நம் எண்ணங்களே செயலாகின்றது; செயலே பழக்கமாகின்றது; பழக்கமே வழக்கமாகின்றது; வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது.
சில பெற்றோர்கள் பிள்ளை மீதுள்ள பிரியத்தில் அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிக்க நினைப்பதுண்டு. அதனால் பிள்ளைகளுக்கு ஒரேயடியாக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டு பின்னர் சீரழிந்து போக நேரிடும்.
 
எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. அதாவது உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.
 
எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து  விடும்.
 
குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது. எல்லாருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும்.  யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.
 
குழந்தைகளைப் பாராட்டுவது வெகுமதி வழங்குவது போன்றவை அவர்களைக் கெடுத்துவிடும் என்று நம்புவது தவறான ஒன்றாகும். பெரும்பாலும் குழந்தைகள்  எதைச் செய்தாலும் அதை விமர்சிப்பதை காட்டிலும், நல்லவற்றை எடுத்து கூறலாம்.
 
குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்
 
பிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும். அவர்கள் பெரியவர்களாக வளரும்போது, மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
 
ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது. அதனால் ஏற்படும் ஆபத்தை அவர்களுக்கு விளக்குவது  அவசியம் ஆகும்.

நீரழிவு நோயில் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா





1. டைப் 1 நீரழிவு நோய்: இது உடலில் இன்சுலின் சுரக்காமல் போனால், அல்லது மிகக் குறைந்த அளவு மட்டுமே இன்சுலின் சுரந்தால் ஏற்படும். இதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படக் கூடும். 

இது இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தின் அணுக்களை சேதமடையச் செய்யும். இந்த நோய் பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை  பாதிக்கின்றது. இரத்தத்தில் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ள, தினமும் இன்சுலின் ஊசி பொட்டுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.
 
2. டைப் 2 நீரழிவு நோய்: இந்த வகையில் உடலில் இன்சுலின் பயன்படுத்தப்படாது அல்லது, இன்சுலின் உற்பத்தியாகாது. சர்க்கரை அணுக்களுக்குள் செல்ல முடியவில்லை என்றால், அணுக்களில் அதிக அளவு க்ளுகோஸ் உள்ளது அதனால் அணுக்கள் சக்தியை பயன்படுத்த முடியாது என்கின்ற நிலை ஏற்படுகின்றது. 
 
இது 35 வயதிற்கு மேலானவர்களுக்கு அதிக அளவு ஏற்படுகின்றது. 9௦% நீரழிவு நோய் இருப்பவர்கள், இந்த வகையாலே பாதிக்கப்படுகின்றனர். சரியான உணவு முறை மற்றும் சீரான உடல் எடையை தக்க வைத்துக் கொண்டால், இதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
 
3. கற்பகால நீரழிவு நோய்: இது குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும். இது குழந்தை மற்றும் தாய், இருவரையும் பாதிக்கும். எனினும், பெரும்பாலான பெண்களுக்கு இந்த நீரழிவு நோய், குழந்தை பிறந்தவுடன் குணமாகிவிடும்.
 
4. பிரிடியாபெடீஸ்: இது காலை வெறும் வயிற்றிலோ அல்லது உணவு அருந்திய பின்னரோ உடலில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறிக்கும். இந்த நேரங்களில் வழக்கத்தை விட உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இந்த நோயின் தாக்கம் இருந்தால், வெகு விரைவாகவே பல பாதிப்புகளை  சந்திக்க நேரிடும்.
 
நீரழிவு நோயின் அறிகுறிகள்: ஒரு சில அறிகுறிகளை வைத்து இந்த நோயை கண்டு பிடித்து விடலாம். பலருக்கும் உடலில் நீரழிவு நோய் இருக்கின்ற அறிகுறி தெரியாமல், ஆரம்ப காலத்தில் அலட்சியமாக விட்டு விடுகின்றனர். ஆனால், இது உண்மையான பாதிப்பை ஏற்படுத்தும் போது தான் விழிப்புணர்வு ஏற்படுகின்றது. 

வாஸ்துப்படி எங்கு சமையலறை இருக்க வேண்டும் தெரியுமா



சமையல் அறையை வீட்டில் அக்னி மூலையான தென் கிழக்கு மூலையில் தான் வைக்க வேண்டும். மாறாக வட கிழக்கு பகுதியில் அமைத்தால் செல்வத்தை எரிப்பதற்கு சமம் ஆகும். இப்படி இல்லையென்றால் வறுமை அதிகமாகும். 

வீட்டில் சமையல் செய்பவர்கள் கிழக்கே பார்த்தவாறு நிற்கும் படி இருக்க வேண்டும். சமையலறையில் சமைக்கும் போது கிழக்கு திசையை நோக்கியவாறு  சமைப்பது நல்லது.
 
சமையலறையின் வாசல் உச்ச பகுதியில் அமைக்கப்பட வேண்டும். மேலும் தென்கிழக்கு சமையலறையில் கிழக்கு சுவரில் வடக்கு ஒட்டி ஜன்னல்  அமைக்கவேண்டும்.
 
பாத்திரங்கள் கழுவும் இடத்தை சமையலறையின் வடகிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைக்கவேண்டும். பல்பொருள் வைத்துக்கொள்ள அலமாறிகளை மேற்கு அல்லது தெற்கு சுவர்களில் அமைத்துக்கொள்ளலாம். 
 
தென்கிழக்கு சமையலறையில் புகை விசிறியை தெற்கு சுவரில் அமைத்துக் கொள்ளவேண்டும். சமையலறையில் அமைக்கப்படும் பின் வாசல் அதன் உச்சதில் இருக்க வேண்டும்.
 
சமையலறைக்கும், உணவு பரிமாறும் அறைக்கும் நடுவில் ஆர்ச் போன்று வளைவான துவாரங்கள் இருக்ககூடாது.

சுவையான வெஜிடபிள் போண்டா செய்ய தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 1 கப்
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - ருசிக்கேற்ப
கலர் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உருளைக் கிழங்கு -  1
கேரட் - 1
பீன்ஸ் - 4
பட்டாணி - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.



செய்முறை:
 
கொத்தமல்லி, காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெள் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர்  வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும், மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள்.
 
காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து  நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள்.
 
பிறகு கடலை மாவுடன் சிறிது உப்பு ஆப்ப சோடா கலர் பவுடர் தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். 
 
எண்ணெய்யைக் காயவைத்து காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள். சூப்பரான வெஜிடபிள்  போண்டா தயார்.